Wednesday, February 22, 2012

தாவீதின் பொக்கிஷம் - The Treasury of David


The Treasury of David - C.H.Spurgeon

சங்கீதம் - 1
தலைப்பு: இந்த சங்கீதத்தை சங்கீதப் புத்தகத்துக்கு முன்னுரையாகக் கருதலாம். முழுப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய குறிப்பும் இதில் அடங்கி இருக்கிறது. ஆசீர்வாதத்திற்கான வழியை நமக்கு போதித்து, பாவிகளின் நிச்சயமான அழிவைக் குறித்து நம்மை எச்சரிப்பது சங்கீதக்காரனின் விருப்பம் ஆகும். இதுவே முதலாம் சங்கீதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இச்சங்கீதத்தின் அடிப்படையிலேயே சங்கீதப் புத்தகம் நமக்கு ஒரு தெய்வீக அருளுரையாக அருளப்பட்டிருக்கிறது என நாம் கருதிக் கொள்ளலாம்.
பிரிவு: இந்தச் சங்கீதம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. முதலாவது (1ம் வசனம் முதல் 3ஆம் வசனம் முடிய) பக்தியுள்ள மனிதனின் ஆசீர்வாதமும், பேரின்பமும் எங்கே இருக்கிறது என்றும், அவன் செய்ய வேண்டிய பயிற்சி என்ன என்றும், மற்றும் கர்த்தரிடத்தில் இருந்து பெறும் ஆசீர்வாதங்கள் என்ன என்றும் தாவீது குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதியில் (வசனம் 4 முதல் கடைசி வசனம் முடிய) துன்மார்க்கரின் நிலையையும், தன்மையையும், அவர்களின் எதிர்காலத்தையும் அவனின் அழிவையும் நடைமுறை மொழியில் குறிப்பிட்டு வெளிபடுத்துகிறார்.  

விளக்கவுரை
வசனம் 1: பாக்கியவான் - சங்கீதங்களின் புத்தகம் எவ்விதம் ஒரு ஆசீர்வாதத்துடன் துவங்குகிறது என்பதைப் பாருங்கள். நம் ஆண்டவராகிய இயேசுவின் மலைப் பிரசங்கமும் கூட இதேபோன்ற ஆசீர்வாதத்துடனே துவங்கியது. பாக்கியவான் என்று இங்கு மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் வார்த்தை மிகவும் சொல்திறன் கொண்ட வார்த்தை ஆகும். மூல மொழியில் இவ்வார்த்தை பன்மையில் வருகிறது. இது பெயரெச்சமா அல்லது தனி வார்த்தையா என்பது விவாதத்திற்குரியது ஆகும். இது முதல், தேவன் நீதிமானாக்கிய ஒரு மனிதனின் மேல் இறங்கும் ஏராளமான ஆசீர்வாதங்களையும் மற்றும் அவன் பெற்று களிகூரும் ஆசீர்வாதத்தின்  பரிப+ரணத்தையும் மகத்துவத்தையும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஓ எவ்வளவு ஆசீர்வாதங்கள்! என்று நாம் வாசிக்கலாம். கிருபை பெற்ற மனிதனின் பேரின்பத்தைப் பற்றிய மகிழ்ச்சியான ஆரவாரமாக (அய்ன்ஸ்வொர்த் என்பவர் சொல்வது போல) நாம் கருதலாம். இது போன்ற ஆசீர்வாதம் நம் மீது தங்குவதாக.
    கிருபை பெற்ற மனிதன் இங்கு எதிர்மறையாகவும் (வசனம்1) நேர்மறையாகவும் (வசனம்2) என இரண்டுவிதமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவன் துன்மார்க்கரின் ஆலோசனையில் நடப்பதில்லை. அவன் ஞானமுள்ளவர்களின் ஆலோசனையைக் கேட்டு, தன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளில் நடக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் இறைபக்தியின் வழி என்பது சமாதானத்தின் மற்றும் இனிமையான வழிகள் ஆகும்.  அவனுடைய நடைகள் மாம்சீக மனிதரின் தீங்கான மற்றும் பொல்லாத திட்டங்களின் படி இராமல் தேவனுடைய வார்த்தையின் படி; கட்டளையிடப் பட்டிருக்கும்.   இது வெளிப்புறமான நடை மாற்றப்படும்போதும், அவபக்தி நம் செயல்களில் இருந்து தூர விலக்கி வைக்கப்படும் போதும் உண்டாகும் உள்ளான கிருபையைப் பற்றிய சிறந்த அடையாளம் ஆகும். அவன் பாவிகளின் வழியில் நிற்பதில்லை என்று அடுத்து வருவதைக் கவனியுங்கள். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது அவனுடைய தோழமை வகைப்படுத்தப் படுகிறது. அவன் பாவியாக இருந்தாலும், இப்போது இரத்தத்தினால் கழுவப்பட்டு பரிசுத்த ஆவியால் உயிர்ப்பிக்கப் பட்டவனாகவும் உள்ளத்தில் புதுப்பிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான். நீதிமான்களின் சபையில் தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தினால் நிற்பதால்,  அவன் பாவம் செய்யும் படிக்கு மற்றவர்களுடன் சேரத் துணிய மாட்டான். பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்கார மாட்டான் என்று  சொல்லப்பட்டிருக்கிறது. தேவ நம்பிக்கை இல்லாதவர்களின்  பரிகாசப் பேச்சுகள் இருக்குமிடத்தில் அவனால் இருக்க முடியாது. மற்றவர்கள் பாவத்தைக் குறித்தும், நித்தியத்தைக் குறித்தும்ம் பரலோகம் மற்றும் பாதாளம் குறித்தும் மற்றும் நித்தியமான தேவனைக் குறித்தும் பரிகசிக்கட்டும். இந்த மனிதன் மத நம்பிக்கையற்றவர்களைக் காட்டிலும் சிறந்த தத்துவத்தைக் கற்று இருக்கிறான். மேலும் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுவதைக் கேட்க பொறுமையாக இருப்பதற்கு அவருடைய பிரசன்னத்தை அதிகமாக உணர்ந்து இருக்கிறான்.  பரிகாசக்காரனின் இருக்கை ஒருவேளை மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கலாம். ஆனால்  அது பாதாளத்தின் வாசலுக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறது. நாம் அதை விட்டு விலகி ஓடுவோம். ஏனெனில் அது சீக்கிரத்தில் வெறுமையாகி, அதில் இருந்த மனிதனை அழிவு விழுங்கி விடும். முதலாம் வசனம் பிரிக்கப்பட்டிருக்கும் விதத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்:
அவன் துன்மார்க்கரின் ஆலோசனையில் நடப்பதில்லை
பாவிகளின் வழியில் நிற்பதில்லை
பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காருவதில்லை

    மனிதர்கள் பாவத்தில் வாழும்போது மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலைமைக்குச் செல்கின்றனர். முதலாவதாக அவர்கள் தேவனை மறந்த, எதையும் பொருட்படுத்தாமல் தேவ பக்தி இல்லாமல் இருக்கிறவர்களின் வழியில் நடக்கின்றனர் -  பாவம் ஒரு வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் நடைமுறை செயல் சார்ந்தாக இருக்கிறது - ஆனால் அதன் பின்பு அவர்கள் பாவப்பழக்கத்திற்குப்பட்டு விடுகிறார்கள். மேலும் துணிகரமாக தேவனுடைய கற்பனைகளை மீறுகிற பாவிகளின் வழியில் நிற்கிறார்கள்.  அவர்களை தனியே செல்ல விட்டால், அவர்கள் இன்னும் ஒரு படி சென்று, அவர்கள் தவறான போதனையாளர்களாகவும் மற்றவர்களை சோதனைக்குட் படுத்துகிறவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இப்படியாக அவர்கள் பரியாசக்காரரின் இருக்கையில் உட்காருகிறார்கள். தீயப்பழக்க வழக்கங்களில் அவர்கள் பட்டம் பெற்றவர்களாகி, தங்களுக்கென்று நியமிக்கப்பட்ட ஆக்கினைத்      தீர்ப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களாக,  மற்றவர்கள் தங்களைப் பின்பற்றவேண்டும் என்பதற்காக அவர்கள் பார்வையில் பேலியாளின் காரியங்களில் கைதேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் தேவனுடைய ஆசீர்வாதத்திற்குச் சொந்தமான பாக்கியவானாக இருக்கிற மனிதன், இப்படிப்பட்டவரளுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டான்.  இவர்களைப் போன்ற விஷ மனிதர்களிடம் இருந்து தன்னை விலக்கி  தன்; பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளுகிறான்;.  மாம்சத்தால் கறைபட்ட வஸ்திரங்களைக் களைவது போல அவன் தன்னிலிருந்து தீய காரியங்களைக் களைந்து போடுகிறான். அவன் துன்மார்க்கரிடம் இருந்து வெளியேறி, பாளையத்துக்குப் புறம்பே கிறிஸ்துவின் நிந்தனையைச் சுமந்து செல்கிறான். கிருபையைப் பெறுவதற்காக இப்படியாக பாவிகளிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்கிறான்.
    இப்பொழுது நாம் அவனுடைய நேர்மறை தன்மையைப் பார்க்கலாம். அவன் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறான். சாபத்திற்கும் ஆக்கினைத்தீர்ப்பிற்கும் உட்பட்டவனாக அவன் பிரமாணத்தில் கீழ் இருக்கவில்லை, மாறாக அவன் வேதத்தில்; இருக்கிறான். அது தன் வாழ்க்கை நெறிமுறையாக இருப்பதில் மகிழ்கிறான். மேலும் அதை தியானிப்பதிலும், அனுதினமும் வாசிப்பதிலும் மற்றும் இரவிலும் அதைக் குறித்து யோசிப்பதிலும் அவன் மகிழ்கிறான்.  அவன் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு, நாள் முழுதும் தன்னுடனே வைத்துக் கொள்கிறான். இரவு நேரத்தில் தூக்கம் வராமல் இருக்கும்போது அவன் தேவனுடைய வார்த்தையைக் குறித்து யோசித்து ஆச்சரியப்படுகிறான். அவன் தன் செழிப்பின் நாட்களில் தேவனுடைய வார்த்தையில் இருந்து சங்கீதங்களைப் பாடுகிறான். தன் பாடுகளின் இரவில் அதே புத்தகத்தில் இருந்து வாக்குத்தத்தங்களை எடுத்து தன்னைத் தேற்றிக் கொள்கிறான். உண்மையான விசுவாசிக்கு கர்த்தருடைய வேதம் அனுதின உணவு ஆகும். ஆனால் தாவீதின் நாட்களில் மோசேயின் ஐந்து புத்தகங்களைத் தவிர வேறு எந்த நூலும் இருக்கவில்லை. ஆகவே நாம் நம் வீடுகளில் முழுமையாக எழுதப்பட்ட வேதாகமத்தை வைத்திருப்பது என்பது நமக்கு எவ்வளவு பாக்கியமான விலையேறப்பெற்ற பரிசு. ஆனால், நாம் வானத்திலிருந்து வந்த இந்த வேதாகமத்திற்கு எவ்வளவு மோசமான மதிப்பைக் கொடுக்கிறோம் என்பதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. நாம் பெரேயா சபையாரைப் போல வேதாகமத்தை ஆராய்கிறவர்கள் அல்ல. நம்மில் மிகவும் குறைவானவர்களே இவ்வசனத்தின் ஆசீர்வாதம் நமக்குரியது என்று உரிமை பாராட்ட முடியும். உங்களில் சிலர் பாவிகளின் வழியில் நடவாத படியால் எதிர்மறையான பரிசுத்தத்தை கொண்டிருப்பதாக நினைக்கக் கூடும். ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் - கர்த்தருடைய வேதம் உங்கள் மன மகிழ்ச்சியாக இருக்கிறதா? நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்க்கிறீர்களா? வேதாகமத்தை உங்கள் வலது பக்கம் இருக்கிற தோழனாக, சமயத்திற்கேற்ற வழிகாட்டியாக நீங்கள் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் இவைகளைச் செய்ய வில்லை எனில் இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு உரியது அல்ல.
- தொடரும்

No comments: